ஈரோடு தம்பதியிடமிருந்து மனைவியால் விற்கப்பட்ட மகனை போராடி மீட்ட தந்தை: நன்றாக படிக்க வைக்கப்போவதாக உறுதி

ஓசூர்: கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி, விற்பனை செய்த குழந்தையை 3 ஆண்டுக்கு பின் கணவர் போராடி மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜெய்நகரைச் சேர்ந்தவர் பாலாமணி. பெயிண்டரான இவர், கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே பல்லூரைச் சேர்ந்த மம்தா என்ற பெண்ணை, கடந்த 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முதலில், மாற்றுத்திறனுடன் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், 2வதாக பிறந்த ஆண் குழந்தைக்கு சுமந்த் என்று பெயரிட்டனர்.

இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் கடந்த 2020ல், கணவனை பிரிந்த மம்தா தனது 2 குழந்தைகளுடன், தாய் வீடான பல்லூர் பகுதிக்கு சென்று விட்டார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பாலாமணி தனது குழந்தைகளை பார்ப்பதற்காக, பல்லூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மனைவியுடன் மகள் மட்டுமே இருந்துள்ளார். மகன் இல்லாதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு மம்தா சரியான பதில் கூறவில்லை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த மம்தா, மகளை கணவரிடம் ஒப்படைத்து விட்டு மாயமானார். இதன் பின்னர், பாலாமணி தனது மகளுடன் ஜெய்நகருக்கு சென்று விட்டார்.

தனது மகன் எங்கே இருக்கிறான் என, பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவி பணத்திற்கு ஆசைப்பட்டு, மகனை விற்பனை செய்ததும், தற்போது அந்த குழந்தை ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் இருப்பதாகவும், பாலாமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலாமணி, பாஸ்கர் ராவின் உதவியுடன் கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

 அந்த புகாரின் பேரில், அத்திப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஈரோடு சென்று பாலாமணியின் மகன் சுமந்த்தை மீட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையாக இருந்த போது விற்கப்பட்ட சுமந்த்துக்கு தற்போது 5 வயதாகி உள்ளது. அவனது வளர்ப்பு பெற்றோர், அவனுக்கு செல்வமணி என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இதனையடுத்து, அந்த குழந்தை, அவனை வளர்த்தவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோரான பாலாமணி, மம்தா ஆகியோரை, அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது, குழந்தையை வாங்கியவர்கள், தாங்களே அவனை நன்றாக வளர்க்கிறோம் எனக்கூறி, பாலாமணி மற்றும் மம்தா ஆகியோரின் கால்களில் விழுந்து கெஞ்சினர். ஆனால், பாலாமணியோ ஊனமுற்ற தனது மகளுக்கு சகோதரன் தேவை, அதனால், எனக்கு கண்டிப்பாக சுமந்த் வேண்டும் என விடாப்பிடியாக இருந்து, மகனை கொடுக்க மறுத்துள்ளார். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின், சிறுவனை வளர்த்தவர்கள், அவனை பெற்றோரிடம் விட்டு விட்டு, பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர். இதனையடுத்து பாலாமணி தனது மகளையும், மகனையும் நன்றாக வளர்த்து படிக்க வைப்பேன் என போலீசாரிடம் கூறி விட்டு அழைத்துச் சென்றார். 

Related Stories: