திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கு ரத்து

சென்னை: அரக்கோணம் எம்பியான திமுகவை சேர்ந்த எஸ்.ஜெகத்ரட்சகன், கடந்த 1982ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தபோது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் அளித்த புகாரில் கடந்த 2013ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி புகாரை முடித்து வைத்தது. அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2016 நவம்பர் மாதம் இரு வழக்குகளை பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜெகத்ரட்சகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சிபிசிஐடி தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்று தெரிவித்து ஜெகத்ரட்சகன் மீது அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: