ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனை கட்டிட தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: கட்டுமான பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்கள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டிடங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்  செயலாளர் செந்தில்குமார், , தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட  இயக்குநர் டாக்டர் உமா, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப்  பொறியாளர் விஸ்வநாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சேலம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பணியில் உள்ள இடர்பாடுகள் களைய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஒன்றிணைந்து அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட ஆவடி அரசு மருத்துவமனையில், நான்கு தளங்கள் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.  இக்கட்டுமானப் பணிகளை எல்லாம் விரைவாக முடித்து பிப்ரவரி 2023க்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: