நியாயம் கேட்டு வந்தவர்களை அடிப்பது அழகல்ல தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பரிந்துரை

சென்னை: நியாயம் கேட்டு வந்தவர்களை கை நீட்டி தாக்குவது கட்சி தலைமைக்கு அழகல்ல என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கருத்து  தெரிவித்துள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் எம்எல்ஏவுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரை வரும் 24ம்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கூறியுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழு என்ன முடிவு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் காங்கிரசார் இடையே எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதலில் கம்பு, கட்டைகளுடன் கட்சியினரை தாக்கியது தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் புகார் இல்லாவிட்டாலும், தொலைக்காட்சிகளில் அவற்றை பார்த்த காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதுவாக இருந்தாலும் போராட வந்த கட்சியினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது தவறான ஒரு முன் உதாரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க தலைமையே புகார் அனுப்பியுள்ளதற்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாகவே  தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.  

 இதுகுறித்து, செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறியதாவது: அரசியல் கட்சி என்பது நிறுவனம் அல்ல. கட்சியின் ஒவ்வொரு தொண்டருக்கும் தங்கள் பிரச்னைகளை தலைமையிடம் முறையிட சந்தேகம் கேட்க, போராட தார்மீக உரிமை உண்டு. அந்த உரிமையோடு தான் கட்சியினர் நெல்லையில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியது என்ன நியாயம்? தாக்கியது யார்?. ரூபி மனோகரன் மீது என்ன தவறு இருக்கிறது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கட்டும். எது நியாயமோ அதை செய்யட்டும். அதேநேரம் ரத்தம் சிந்தியவர்களுக்கு என்ன பதில்? அவர்களை தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? எந்த பிரச்னையையும் பேசி தீர்ப்பதற்கு பதில் கை நீட்டி தாக்குதல் நடத்துவது என்பது கட்சி தலைமைக்கு அழகல்ல. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: