×

புளியந்தோப்பில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்: ரூ.10 லட்சம் உதவி, வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கினார்

சென்னை: புளியந்தோப்பில் உள்ள கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அவரது குடும்பத்துக்கு  ஆறுதல் கூறினார். அப்போது, ரூ.10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு வீட்டிற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம்  எம்.எம் கார்டன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவியின் மகள் பிரியா (17). ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி மற்றும் கால்பந்தாட்ட வீராங்கனை. இந்நிலையில், அவர் சவ்வு மூட்டு ஆபரேஷன் செய்த மருத்துவர்களின் தவறால், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  

இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது தந்தை ரவி, தாயார் உஷாராணி மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரியாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், பிரியாவின் மூத்த அண்ணன் பிரேம்குமாருக்கு சுகாதாரத் துறையில் பணி நியமனத்துக்கான ஆணையையும், அவர்கள் குடும்பத்துக்கு பெரம்பூர் கவுதமபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டிற்கான ஒதுக்கீட்டு ஆணையையும் வழங்கினார்.
மேலும், அவர்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, பிரியாவின் தந்தை ரவி நிருபர்களிடம் கூறுகையில், `எங்கள் மகள் இறப்பு தாங்கிக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தாலும், எதிர்பாராதவிதமாக தமிழக அரசு உடனடியாக, எங்களுக்கான அனைத்து வசதியையும் செய்து தந்துள்ளது. ரூ.10 லட்சம் நிதியுதவி, அரசு வேலை தருவதாக தெரிவித்திருந்த நிலையில், வீட்டிற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. எங்களது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தர தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

* கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை மாணவி பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது.

Tags : Chief Minister ,Priya ,Puliantop , CM comforts footballer Priya's family by visiting house in Puliantop: Rs 10 lakh assistance, house allotment order
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...