சென்னை முழுவதும் பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி: அண்ணாமலை பேட்டி

சென்னை: மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நேற்று தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் நேரில் வந்தனர். பிரியாவின் இல்லத்துக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பிரியாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர், அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: பிரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. பல அரசு மருத்துவமனைகள் இன்று இந்த நிலையில் தான் இருக்கிறது. பிரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததாக பிரியாவின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. பிரியாவின் இறப்பு துரதிஷ்டவசமானது. முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ராமன் விஜயன் தலைமையில், 5 நாட்களில் பிரியாவின் இல்லத்திற்கு மீண்டும் நேரில் வந்து அவரின் பெற்றோரை சந்திப்போம். பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி பெறுவதற்கான முழு செலவையும் பாஜ ஏற்றுக்கொள்ளும். மழைக்காலம் முடிந்தவுடன் பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகள் நடத்திக்காட்ட போகிறோம். அந்த போட்டிகளுக்கு ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சரை அழைத்து வந்து கவுரவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: