குவைத் அரசின் நிபந்தனையால் வேலை இழக்கும் 12 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குவைத் அரசின் பொருத்தமற்ற நிபந்தனையால் வேலை இழக்கும் 12 ஆயிரம் இந்திய இன்ஜினியர்களுக்கு  வேலையை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: குவைத் அரசு பிறப்பித்திருக்கும் பொருத்தமற்ற நிபந்தனை காரணமாக, அங்கு பணியாற்றி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக இன்ஜினியர்கள் உள்ளிட்ட 12,000 இந்திய பொறியாளர்கள் பணி இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்திய கல்வி நிறுவனங்களின் அங்கீகார முறை குறித்து அறியாததால் குவைத் அரசு விதித்திருக்கும் புதிய நிபந்தனையிலிருந்து இந்திய பொறியாளர்களை விடுவிக்க குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

குவைத்தில் பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் விசா நீட்டிப்பு பெற வேண்டும் என்றால், அதற்கு குவைத் பொறியாளர்கள் சங்கத்திடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்று குவைத் அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், இந்திய தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இந்திய பொறியாளர்களுக்கு மட்டும் தான் தடையின்மை சான்று வழங்க முடியும் என குவைத் பொறியாளர்கள் சங்கம் கூறுகிறது.

கல்வித்தகுதியும், அனுபவமும் பெற்ற இந்திய பொறியாளர்கள், குவைத் அரசின் தவறான புரிதல் காரணமாக வேலையிழப்பதை அனுமதிக்க முடியாது. குவைத்தில் இந்திய பொறியாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு. அதனால், குவைத் அரசுடன் பேசி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொறியாளர்கள் அனைவருக்கும் வேலையும், விசாவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: