×

182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் தேனி வி.ஐ.பி சிக்குகிறார்? தாசில்தார் கைதை தொடர்ந்து வேகமெடுக்கிறது சிபிசிஐடி விசாரணை

தேனி: தேனியில் கலெக்டர் அலுவலகம் அருகே 182 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் முக்கிய விஐபி ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது. சிபிசிஐடி விசாரணையின் பிடி இறுகுவதால் மேலும் பல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதால் அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் 1996ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, வைகை வீரன் அழகுமுத்துகோன் மாவட்டம் என்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

பின்னர் 1997ல் தலைவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு ஊர் பெயரை கொண்டு மாவட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் தேனி நகரை தலைமையிடமாகக் கொண்டு தேனி மாவட்டம் உருவானது. தேனி மாவட்டம் உருவானதும் அந்த நகரில் உள்ள மலை அருகே கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மைதானம், போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் குடியிருப்பு என்று ஒருங்கிணைந்த பகுதி உருவாக்க மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகமும் கட்டப்பட்டது. இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலம் முழுவதும் அரசு ஆவணங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது.  

ஏராளமான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதவிவேற்றம் செய்யப்பட்டது. இதற்காக விஏஓ, தாசில்தார், மாவட்ட வருவாய் அதிகாரி, கலெக்டர், நில நிர்வாகத்துறை அதிகாரிகள், துறை செயலாளர் என கீழ்மட்டம் முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை நில ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பதவிவேற்றம் செய்வதற்காக ரகசிய கடவு சொற்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆவணங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பிறகு அதிகாரிகள், அந்த இணையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில்தான் கம்ப்யூட்டர் மயமாக்கும்போது அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களாகவும், பட்டா நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்களாகவும் மாற்றப்பட்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் கீழ் மட்ட அதிகாரிகள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை உள்ளவர்கள் மீண்டும் இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு பதில் தவறுகளை சரி செய்ய தாசில்தார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு, அவர்கள் அந்த தவறை சரி செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் பல தாசில்தார்கள் அரசு புறம்போக்கு நிலங்களை தங்களது குடும்பத்தினர், பிள்ளைகள், உறவினர்கள், பினாமிகள் பெயரில் பட்டா மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளின் துணை கொண்டு புறம்போக்கு நிலங்களை பினாமிகள் பெயரில் பட்டா மாற்றியுள்ளனர். அப்போது அதிமுக ஆட்சி நடந்து வந்தது. இதனால் அதிமுகவில் செல்வாக்காக இருந்த பலரும் அதிகாரிகள் துணையுடன் புறம்போக்கு நிலங்களை பட்டா மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான அன்னபிரகாஷ் மற்றும் பலரது பெயரில் பட்டா மாற்றியுள்ளனர்.

இதற்கு அப்போது அதிகாரிகளாக உள்ள பலரும் துணைபோயுள்ளனர். இந்த 182 ஏக்கர் நிலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணை திருட்டுத் தனமாக அள்ளி விற்பனையும் செய்துள்ளனர். இதற்காக முறையாக கனிம வளத்துறையில் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் கலெக்டர் வரை உள்ள அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணை கொள்ளையடித்து விற்பனை செய்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்ததால், பொதுமக்களும் பயந்துபோய் புகார் செய்யவில்லை. இந்தநிலையில், அந்த நிலத்தை விற்பனை செய்ய லே அவுட் போட்டபோதுதான், உள்ளூர் மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தை எப்படி அவர்கள் விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று விசாரித்தனர். அப்போதுதான் அரசு நிலத்தை தனியார் யெபரில் பட்டா மாற்றப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து மக்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து இது குறித்து தேனி மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பெரியகுளம் கோட்டாட்சியராக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா,  பெரியகுளம் தாசில்தார்களாக இருந்த கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, துணை  தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி,  சக்திவேல், விஏஓ சுரேஷ்குமார், அப்போது ஒன்றிய செயலாளராக இருந்த  அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அன்னபிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய தாசில்தார் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஒரு ஒன்றியச் செயலாளருக்காக அரசு இயந்திரமே முற்றிலும் தவறுக்கு துணை போயிருக்க முடியாது. ஒரு சாதி சான்றிதழ் கேட்டாலே அலைக்கழிக்கும் இந்த காலத்தில் எப்படி அரசு ஆவணங்களையே மாற்றினார்கள். இதனால் அன்னப்பிரகாஷ் ஒரு விஐபியின் பினாமியாக இருக்கலாம். அந்த விஐபிக்காக அன்னப்பிரகாஷ் பெயரில் ஆவணங்களை மாற்ற அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றியிருக்கலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் 182 ஏக்கரில் முழுமையாக மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் அதிகாரிகள் துணைபோயுள்ளனர். இதனால் இந்த முறைகேட்டுக்குப் பின்னால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய விஐபி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தாசில்தார் கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து முக்கிய ஆவணங்கள் மற்றும், ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். விஐபிக்கள் தொடர்பு குறித்து முக்கிய தகவல்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரித்துள்ளனர்.

இது குறித்து சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ளது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேனி விஐபிக்கு சிக்கல் எழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் இதேபோல பல நூறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் பட்டா மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்தும் தேனி மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்குப் பிறகு அரசு புறம்போக்கு நிலங்கள் மாற்றப்பட்டது குறித்து ஆய்வு நடத்தினால் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்த நிலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண் திருடியது குறித்தும் கனிம வளம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அபராதம் விதிக்க வேண்டும். இதற்கென்று தனியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அன்னப்பிரகாஷ் ஒரு விஐபியின் பினாமியாக இருக்கலாம்.  அந்த விஐபிக்காக அன்னப்பிரகாஷ் பெயரில் ஆவணங்களை மாற்ற அதிகாரிகள் தீவிரமாக  பணியாற்றியிருக்கலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

* மலையை மொட்டையடிக்கும் விஐபிக்கள்
அதிமுக ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் தேனி மாவட்டத்தில் குரங்கணி பகுதியில் இருந்து டாப் ஸ்டேஷன் என்ற மலை பகுதிக்குச் செல்ல சாலை அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக சர்வேயும் செய்யப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கும் பகுதியிலோ அல்லது சாலைக்கு இடைப்பட்ட பகுதியிலோ கிராமங்கள் இல்லை. மக்களும் வசிக்கவில்லை. மக்கள் வசிக்காத பகுதிக்கு எதற்காக சாலை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அதேபோல, சோத்துப்பாறை முதல் அகமலை வரை மலைப் பகுதிக்கு சாலை அமைக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 மலை கிராமங்கள் மட்டுமே உள்ளன. அதில் 300 முதல் 400 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து சாலை அமைக்க அதிமுக அரசு முன் வந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த இரு சாலைகளும் முக்கிய விஐபி ஒருவருக்காக அரசு பணத்தை செலவு செய்ய திட்டமிட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்தப் பகுதியிலும் அரசு புறம்போக்கு நிலங்களை விஐபிக்கள் அபகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு மலை பகுதியில் ஓரு விஐபியின் தோட்டத்துக்குள் சிறுத்தை இறந்து கிடந்தது. விளை நிலங்களுக்குள் எப்படி சிறுத்தை வரும். காட்டுப் பகுதிதான் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் சமீபத்தில் எழுந்தது. இதனால் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது மலை சார்ந்த பகுதிகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் அபகரிப்பு குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

Tags : VIP ,CBCID , Theni VIP caught in 182 acre government land grab case? CBCID probe continues to speed up tahsildar's arrest
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...