×

டுவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசானிலும் ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கியது

சியாட்டில்: டுவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசானிலும் ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கியது. உலகப்பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.5 லட்சம் கோடி) கொடுத்து வாங்கினார். பின்னர் டுவிட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அதிரடியாக நீக்கினார். டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட்டனர்.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கை தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதமாகும். மேலும் இதுவரை இல்லாத அளவில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது.

செலவினங்களை குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் தரப்பில் கூறப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது என அமேசான் தெரிவித்துள்ளது. சில பணியிடங்கள் அமேசான் நிறுவனத்தில் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவத்துக்குள்ளே வேறு துறைகளுக்கு (காலி இடங்கள் இருப்பின்) விண்ணப்பித்து இடம் மாறி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமேசானில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணிநீக்கம் தொடங்க உள்ள நிலையில், எத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களிடம் ஒருவித அச்சம் உள்ளது.



Tags : Twitter ,Facebook ,Amazon , Following Twitter and Facebook, Amazon also started laying off employees
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...