×

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியுடன் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர் மற்றும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. போதிய மழை, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் குளங்களில் நீர்வருவதில் பாதிப்பு ஏற்பட்டதால் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை குடிக்க வேண்டிய நிலை ஏராளமான கிராமத்தினருக்கு ஏற்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. குளத்து நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் மூலம் வரும் நீர் கிடைக்காத ஊர்களில் இந்த ஆழ் குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்கின்றனர். இவ்வாறு கிடைக்கும் ஆழ்குழாய் நீர் பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் பரிசோதணை செய்யப்படும்.

இதில் குளோரைடு, புளோரைடு, அமிலத்தன்மை, காரத்தன்மை, இரும்புச்சத்து, நைட்ரைடு, நேட்ரேட், எஞ்சியுள்ள உப்புக்கள், எஞ்சியுள்ள குளோரின், பாஸ்பேட், நுண்கிருமி சோதணை என சுமார் 16 சோதணைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட பரிசோதனைகளில் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் குடிக்கும் நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நல்ல முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் குளங்களில் கிடைக்கும் நீர் ஆழ்குழாய் நீரை விட நல்ல தன்மை நிறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சில இடங்களில் மட்டும் ஆழ்குழாய் குடிநீர் தொட்டியுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் சில பேரூராட்சிகளுக்கு மட்டுமே தனியாக குடிநீர் திட்டங்கள் உள்ளது. மொத்தமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சில நூறு கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. எஞ்சிய கிராமங்களில் குளங்கள் இல்லாத கிராமங்கள், குளத்தில் நீர் இல்லாத நிலையில் ஆழ்குழாய் நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இ

து குறித்து அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏராளமான கிராமங்களில் வேறு வழியின்றி உள்ளாட்சி நிர்வாகம் மூலம் போடப்பட்ட ஆழ் குழாய் அல்லது வீடுகளில் போடப்பட்ட ஆழ்குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். கடந்த 20 ஆண்டுகளிலேயே இதுபோல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் கடுமையானதாகும். தற்போது ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளுக்கு குடிநீர் மிக முக்கிய காரணமாகும். குடிநீருக்கு மாற்று வழியே இல்லாத கிராமங்களில் ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைப்பதை கட்டயமாக்க வேண்டும்’என்றார்.



Tags : Sivagangai district , Urge to set up treatment plant with drinking water tank in Sivagangai district
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்