மதவாத சக்திகளை எதிர்க்க அனைவரும் ஓரணியாக இணைந்து செயல்பட வேண்டும்: திருப்பூரில் துரை வைகோ வலியுறுத்தல்

திருப்பூர்: ‘‘மதவாத சக்திகளை எதிர்க்க அனைவரும் ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,’’என்று திருப்பூரில் துரை வைகோ கூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகள் அரசியல் அரசியல் வாழ்க்கையுடன் கூடிய மக்கள் பணி, ‘மாமனிதன் வைகோ’என்ற தலைப்பில் ஆவண திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியீட்டு விழா திருப்பூர் ஸ்ரீசக்தி சினிமாஸ் தியேட்டரில் நேற்று நடைபெற்றது. மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில் மேயர் தினேஷ்குமார் திரைப்படத்தை வெளியிட்டு பேசினார்.

இதில், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தெற்கு மாநகர செயலாளர் திமுக டி.கே.டி.நாகராசன், மதிமுக., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: இந்த படத்தை எடுக்க 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம், தலைவர் வைகோவின் மக்கள் பணிகள், சாதனைகள் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான். வைகோ நன்றாக இருக்கும்போதே, மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு தலைவரை நாம் சரியாக பயன்படுத்தவில்லையே என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

2வது காரணம் மதிமுகவின் சாதனைகளுக்கு தொண்டர்கள் தான் காரணம். பலர் உயிரிழந்துள்ளார்கள். இந்த இயக்கத்தின் நமது தந்தையும் இருந்திருக்கிறார் என உங்கள் பிள்ளைகளும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கத்தை பற்றி அனைவரும் பேச வேண்டும். இந்த 3 காரணங்களுக்காக தான் இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது உள்ள கூட்டணியே தொடரும். நாட்டில் உள்ள மதவாத சக்திகளை எதிர்க்க அனைவரும் ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டை சீரழிக்கும் மதவாத சக்திகளை எதிர்த்து, அனைத்து இயக்கங்களும், ஒரே அணியில் திரண்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி கட்டாயம் உறுதி. மரியாதை நிமித்தமாக நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தியை சந்தித்தேன். அவர் நாட்டின் நலனுக்காகவும், மதத்தின் பெயரால் நாட்டை பிளவுப்படுத்தும் இந்த நேரத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு அவர் நடைபயணத்தை ெதாடங்கியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானும் கலந்து கொண்டேன். இவ்வாறு துரைவைகோ கூறினார்.

Related Stories: