ஸ்ரீ காளஹஸ்தியில் விதிமுறைகளை மீறி கோயில் குளத்தில் அரசியல் கூட்டம்; எம்எல்ஏவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஸ்ரீ காளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தி கோயில் குளக்கரையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ நடத்திய அரசியல் பொதுக்கூட்டம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு 3 தலை நகரங்களுக்கு ஆதரவாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்தி வருகின்றனர். அதன்படி திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சொந்தமான (நாரத புஷ்கரணி) நாரதர் குளக்கரையில் நேற்று ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் தலைமையில் அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது.

குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் கரையின் நான்குபுறத்திலும் கட்சியினர் ஏராமானோர் திரண்டிருந்தனர். பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக உலக புகழ்பெற்று விளங்கி வரும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் குளக்கரையில் விதிகளை மீறி நடந்த இந்த பொதுக்கூட்டத்தால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், உலக அளவில் பரிகார தலமாக உள்ள இக்கோயில் குளத்தின் புனிதத்தை சீர்குலைத்து ஆளும் கட்சியினரே அரசியல் பொதுக்கூட்டம் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதனால் பக்தர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செய்யாத அநியாய செயலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் செய்துள்ளனர். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வரலாற்றிலேயே முதல்முறையாக அரசியல் கட்சி கூட்டத்தை நடத்தியிருப்பது எல்லை மீறிய செயலாகும். கோயில் குளத்தை அரசியல் மையமாக மாற்றிக்கொண்டது சரியான முறை அல்ல. புனிதமான ேகாயில் குளத்தின் அருகே அரசியல் கூட்டத்தை நடத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அதிகாரிகள் எவ்வாறு அனுமதித்தனர். அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று இனி நடக்காமல் இருப்பதற்காக மேல் அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: