திமுக அரசை சீர்குலைக்க ஆளுநரை பயன்படுத்தும் பாஜ: பிரகாஷ்கரத் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் பேசியதாவது: ஒற்றை கலாச்சாரம், ஒரே தலைமை எனும் இந்துத்துவா ராஜ்யத்தை நிறுவும் திட்டத்தை பாஜ அரசு மூலம் கடந்த 8 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் செயல்படுத்துகிறது. இந்துத்துவம், கார்ப்பரேட் மயமாக்குவதற்காக, தொழிலாளர்கள், விவசாயிகள், தலித் பெண்கள், பழங்குடியினர் மீது கொடிய தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் காலூன்ற அனைத்து வித சூழ்ச்சிகளையும் செய்கிறது. அதற்காக, தி.மு.க. அரசை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதற்காக, ஆளுநரை பயன்படுத்துவது, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தமிழக மக்களிடம் சூழ்ச்சிகளை உருவாக்கி வலுபெறலாம் என நினைக்கிறது. மதவெறி கருத்துக்களை கிராமப்புற மக்களிடம் விதைக்கிறார்கள். மனுஸ்ருதியை, இந்தியை, சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணிக்க தீவிரமாக பாஜக முயற்சிக்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. தமிழக சட்டமன்றத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் வருவதற்கு அதிமுக காரணமாக இருந்தது. எனவே, பாஜவுடன் இணைந்த கூட்டணி கட்சிகளையும் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: