×

தொடர்ந்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட அமைந்தகரை ரவுடிக்கு 2வது முறை குண்டாஸ்

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை கதிரவன் காலனியை சேர்ந்தவர் நீலேஷ்(எ) நீலேஷ்குமார்(23). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி உட்பட 16 வழக்குகள் அமைந்தகரை, அரும்பாக்கம் மற்றும் சூளைமேடு ஆகிய காவல்நிலையங்களில்  நிலுவையில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 23ம் தேதி பட்டாசு கடை உரிமையாளர் ராஜன்(53) என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மாமூல் கேட்டு கல்லாப்பெட்டியில் இருந்து 3,500 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற வழக்கில் அமைந்தகரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுதவிர அமைந்தகரை, அரும்பாக்கம் மற்றும் சூளைமேடு சுற்றுவட்டார பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

சிறையில் இருந்து வெளியேவந்ததும் மீண்டும் கைவரிசை காட்டிவந்ததால் ரவுடியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும் என்று அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், சென்னை மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, ரவுடி நீலேஷை மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து துணை ஆணையர் விஜயகுமார் கூறும்போது, ‘’அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் வழிப்பறி, செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட்டில் ஈடுபடுகின்றவர்களை கண்டறிந்து குண்டாசில் வழக்கு பதிவு செய்து கைது செய்கிறோம். பழைய குற்றவாளிகளின் பட்டியலை கணக்கெடுத்து வருகிறோம். குற்றங்களை  தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’என்றார்.

Tags : 2nd time kundas for Nitagarai raider who continued to rob and steal chain
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்