×

வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை: சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சீசன் நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவகைள் வந்து குஞ்சு பொரித்து மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், சில தினங்களாக வேடந்தாங்கல் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பியது. இதன்காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்தியா மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா, இந்தோனேஷியா,  பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வந்துள்ளது.

இதன்படி, தற்போது நீர் காகம், வெண்கொக்கு, சாம்பல் நிற கொக்கு, கரண்டி வாயன், தட்டை வாயன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட இனங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் ஏரியில் காணப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பறவைகளின் எண்ணிக்கை அதிகமாகும். வழக்கமாக இந்த ஏரிக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகள் வருகை தரும். இதனால் இன்னும் ஏராளமான வகை பறவை இனங்கள் வரும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.  வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இங்குள்ள கடம்ப மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளின் காட்சி பார்வையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. காலை வேலைகளில் பறவைகள் கூட்டம்,  கூட்டமாக ஏரியில் இருந்து இரை தேட வெளியில் செல்லும் காட்சியும் இரைதேடி முடித்துவிட்டு மாலை நேரங்களில் மீண்டும் ஏரிக்கு பெரும் கூட்டமாக திரும்பும் காட்சியும் மிகவும் ரம்மியமாக இருக்கும். இதனை காண்பதற்காகவே சரணாலயத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Tags : Vedanthangal Sanctuary , Visit of foreign birds to Vedantangal Sanctuary: Tourist arrivals also increase
× RELATED வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவை...