×

உயர்நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாஜக பேனர்: சமூக ஆர்வலர்கள் நடவடிக்கைக்கு கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனர்களை அப்புறப்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பேனர்கள் வைப்பது ஒரு கலாசாரமாக மாறியுள்ளது. கல்யாணம், காதுகுத்து, வரவேற்பு என சுபநிகழ்ச்சியில் இருந்து இறுதி அஞ்சலி என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. சாலையோரங்களில் வைக்கப்பட்ட கட்சி பேனர்கள், கொடிகம்பங்கள் சாய்ந்து பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், தமிழகத்தில் இனி பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் தடைவிதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று அக்கட்சி சார்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சில பேனர்கள் காற்றில் கிழிந்து ஆபத்தான நிலையில் தொங்குகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி பாஜகவினர்  வைத்த பேனருக்கு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் பேனர்கள் அகற்றப்படவில்லை. காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இனிமேல் சாலைகளில் வைக்கப்படும் பேனரால் ஒரு உயிர்கூட பறிபோய்விட கூடாது என சமூக ஆர்வலர்கள்  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : BJP ,Chennai-Trichy National Highway ,Chengalpattu ,High Court , BJP banner on Chennai-Trichy National Highway near Chengalpattu in defiance of High Court order: Social activists demand action
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...