×

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு; 5 பேர் பலி

இசே: ஈரானில் போராட்டக்காரர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் போராட்டங்களால் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் காரில் வந்த
மர்மநபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு குழந்தை, ஒரு பெண், 3 ஆண்கள் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 10 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஈரானில் நடந்து வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின.முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள், ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் மீது கற்களை வீசினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. முன்னதாக கடந்த மாதம் ஈரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஒரு புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்ததும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.



Tags : Iran , Heavy firing on protesters in Iran; 5 people died
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...