×

நேபாளத்தில் 20ம் தேதி பொதுத்தேர்தல்; டார்ஜிலிங், உத்தரகாண்ட் எல்லைகளை மூட இந்தியா முடிவு

புதுடெல்லி: நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கு வங்கம் டார்ஜிலிங்கிலும், உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகர் மற்றும் சம்பாவத் பகுதிகளில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை இன்று முதல் வரும் 20ம் தேதி வரை மூட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தமுள்ள 275 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 138 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சியை பிடிக்கும். கடந்த 2017ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. நேபாளி காங்கிரஸ் கட்சி கூட்டணி அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்தது.

இருப்பினும் கடந்த 2021 ஜூலையில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா ஆட்சியை பிடித்தார். அவரே பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேபாளத்தில் தற்போது ஆட்சியில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி, 5 கட்சிகளுடன் கூட்டணி வைத்து, இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. தற்போது எதிர்கட்சியாக உள்ள நேபாள் கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி நேபாள் பரிவார் மற்றும் ராஷ்டிரிய பிரஜாதந்த்ர உள்ளிட்ட 3 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, இத்தேர்தலில் போட்டியிடுகிறது. நேபாளத்தில் வரும் 20ம் தேதி  நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லைகளை மூட, இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேபாள அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் டார்ஜிலிங் மற்றும் மிரிக் என 2 பகுதிகளில் நேபாள எல்லை உள்ளது. டார்ஜிலிங்-நேபாளம் இடையே உள்ள இந்த எல்லைப்பகுதிகள் 100 கிமீ தொலைவு வரை நீளம் உள்ளவை. இந்தியா மற்றும் நேபாளம் வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் டார்ஜிலிங் நகர் எல்லைப்பகுதியை பயன்படுத்தி, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வந்து செல்கின்றனர். பாசுபதி நகரில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மிரிக் எல்லையை கடந்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பிதோராகர் மாவட்டத்திற்கும், நேபாள நாட்டின் பைதடி மற்றும் தர்ச்சுலா மாவட்டங்களுக்கும் இடையே இரு நாட்டின் எல்லைப் பகுதி உள்ளது.

அதே போல் சம்பாவத் மாவட்டத்திற்கும், நேபாளத்தின் காஞ்சன்பூர் மாவட்டத்திற்கும் இடையே இரு நாட்டின் எல்லைப் பகுதி உள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள நேபாள நாட்டின் மாவட்டங்களில் நியாயமான மற்றும் பாதுகாப்பான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப்பகுதிகளை வரும் 20ம் தேதி வரை மூட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Tags : General Election ,Nepal ,India ,Darjeeling ,Uttarakhand , General Election in Nepal on 20th; India decides to close Darjeeling, Uttarakhand borders
× RELATED மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க அனுமதி