இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 20 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி: அமெரிக்கா உள்பட 7 நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி சரிவு

டெல்லி: இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான ஏற்றுமதி விகிதம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபரில் சரக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது ரூபாயின் மதிப்பில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் இருந்து அதிகம் பொருட்கள் ஏற்றுமதியாகும் நாடுகளில் முதல் 10 இடங்களில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சீனா, சிங்கப்பூர், வங்காள தேசம், பிரிட்டன், பிரேசில், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்த 10 நாடுகளும் 47% பங்கை கொண்டுள்ளன. ஆனால் இந்த 10 நாடுகளில் 7 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விகிதம் கடந்த அக். மாதம் சரிந்து விட்டதாக ஒன்றிய அரசு வெளிடியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இறக்குமதி விகிதம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும் கடந்த மாதம் வழக்கமான அளவை விட 25.6% குறைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட ஐக்கிய அரபு அமீரகமுடனான ஏற்றுமதியில் 18% சரிவை சந்தித்துள்ளது.

சீனாவுடனான ஏற்றுமதி 47.5%ஆகவும், அதிகபட்சமாக வங்காள தேசத்திற்கான ஏற்றுமதி 52.5% ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. பிரிட்டன், சவூதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் கடந்த அக். மாதத்தில் 20%க்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியை 20 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி இது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆறுதல் தரும் தகவலாக நெதர்லாந்து, சிங்கப்பூர், பிரேசில் ஆகிய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி மட்டுமே உயர்ந்துள்ளது.

நெதர்லாந்த்க்கு 21.6%, சிங்கப்பூருக்கு 24.8%, பிரேசிலுக்கு 57.75% அதிகமாகவும் இந்தியா சரக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. சரக்கு ஏற்றுமதி விகிதம் தொடர்ந்து சரிவதும், இறக்குமதி உயர்வதும் இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: