மோதல் தொடர்பாக ரூபி மனோகரன், ரஞ்சன் குமாருக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்: வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன், ரஞ்சன் குமார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு நெல்லை மாவட்ட காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இருவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி, ரூபி மனோகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்ட கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தால் சத்தியமூர்த்திபவனில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 62 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், இந்த தீர்மானத்தின் மீது விசாணை நடத்த தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உத்தரவிட்டார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியும் வரும் 24ம்தேதி இதற்கான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சத்தியமூர்த்திபவனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு வரும் 24ம்தேதி காலை 10.30மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர், ரூபி மனோகரனுக்கு அனுப்பிய கடிதத்தில்,‘‘சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்து வரப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முக்கிய தலைவர்கள் சத்தியமூர்த்திபவனுக்கு வருவதை தடுத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு தாங்கள் தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.

எனவே, வரும் 24ம்தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்கிறேன்’’என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று எம்.பி.ரஞ்சன்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,‘‘சத்தியமூர்த்திபவனுக்குள் நடந்த முற்றுகை போராட்டத்திற்கு வந்தவர்களை தாங்கள் தாக்கியதாக உங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க கேட்டுக் கொள்கிறேன்’’என கூறப்பட்டுள்ளது.   

Related Stories: