சிவகாசியில் 2023 ஆண்டிற்கான தயாரிப்பு பணிகள் தீவிரம்; காலண்டர்களின் விலை 30 சதவிகிதம் அதிகரிப்பு: மூலப்பொருட்கள் விலை உயர்வால் நடவடிக்கை

சிவகாசி: சிவகாசியில் 2023-ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் காலண்டர் விலை 30 சதவிகிதம் உயர்வு இருக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத்தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணி பிரதானமாக உள்ளது. சிவகாசியில் 2023ஆண்டிற்க்கான தினசரி காலண்டர், மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி தற்பொழுது தீவரமாக நடைபெற்று வருகிறது.

சிவகாசியில் உள்ள 800க்கும் மேற்பட்ட அச்சகங்களில் நாள் காட்டி தயாரிப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். காலண்டர் தயாரிப்புப் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிவகாசி காலண்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி , தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 200 வகையான வகைகளில் தயார் செய்யப்படுகின்றது. சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று 2023ம் ஆண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கியது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தயாரிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு வெளிமாநில ஆர்டர் காலண்டர்கள் அனுப்பும் பணிகள் தொடங்கி தற்போது வரை அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பெரும் சிரமத்திற்கு இடையில் காலண்டரை தயாரித்து ஆர்டர் கொடுத்தவர்களுக்கு அனுப்பி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் பல்வேறு வகையான தினசரி காலண்டர்கள், மாதாந்திர காலண்டர்கள், டேபிள் காலண்டர்கள், பிவிசி காலண்டர்கள், ஆர்ட் பேப்பர் டெய்லி காலண்டர்கள், ஃபேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் என பல்வேறு வகையான காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் பேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த பேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் பல்வேறு மாடல்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தினசரி காலண்டர்கள் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள், முருகர் போன்ற கடவுள் படங்களும், முஸ்லிம்களுக்கான மெக்கா மதினா, கிறிஸ்தவர்களுக்கான யேசுநாதர், தேவாலயங்கள், பறவைகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்டவை வண்ணமயமாக அச்சிடப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், விவேகானந்தர் உள்ளிட்ட ஆன்மிகத் துறவிகள் படங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் அடங்கிய காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

கையை கடிக்கும் காலண்டர் விலை

காலண்டர் தயாரிப்பாளர் ரிஷி சதீஷ்குமார் கூறுகையில், ‘‘வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்சி, அரசு அலுவலகங்கள் என எங்கு சென்றாலும் அங்கு தினசரி, மாத காலண்டர்கள் தொங்கவிட்டிருப்பதை நம்மால் காண முடியும். சிவகாசியில் தயாரிக்கப்படும் தினசரி, மாதக்காலண்டர்கள், ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவமைப்புகளில், புதுபுது ரகங்களில் தயாரிக்கப்படுவதால் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

காலண்டர் தயாரிப்புக்கு அட்டை, ஆர்ட் பேப்பர் ஆகியவை முக்கிய மூலப்பொருளாக உள்ளன. இந்த மூலப்பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சோதனையாக காலண்டர் தயாரிப்புக்கான ஜிஎஸ்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்திவிட்டது. இதனால் 2023ம் ஆண்டு காலண்டர் விலை கடந்தாண்டை விட 30 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’என்றார்.

ரூ.15 முதல் காலண்டர் தயாரிப்பு

காலண்டர் முகவர் பிரபு கூறும்போது, ‘‘வியாபார நிறுவனங்கள் பெரும்பாலும் சாமி படங்கள் அதிகமாக ஆர்டர் கொடுக்கின்றனர். 6/8 முதல் 14/40 வரை 8 வித மாடல்களில் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.15 முதல் ரூ.600வரை காலண்டர்கள் விலை உள்ளது. வியாபார நிறுவனங்களை வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த ஆண்டும் புதுபுது வடிவில் காலண்டர்கள் தாயாரிக்கபட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் சார்ந்த காலண்டர்கள்: அரசியல் கட்சியினர், இறுதி நாள்களில்தான் ஆர்டர் கொடுப்பார்கள் என்பதால், அடுத்த மாத இறுதியில் கட்சித் தலைவர்களின் படங்கள் அடங்கிய காலண்டர் ஆர்டர்கள் பெறப்பட்டு, தயாரித்து வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: