×

குஜிலியம்பாறை கம்புகுத்தி கவுண்டன் குளத்தில் லேசான உடைப்பு

* குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடும் அபாயம்
* கரையை பலப்படுத்த கிராமமக்கள் கோரிக்கை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் கம்புகுத்தி கவுண்டன் குளம் நிரம்பி மறுகால் ஓடும் கரையில் லேசான உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேருகிறது. இந்த மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடும் அபயாம் உள்ளதால் கரையை பலப்படுத்தி வெளியேறும் மழைநீரை தடுத்து நிறுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் கம்புகுத்தியூர் உள்ளது. இங்கு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கம்புகுத்தி கவுண்டன் குளம் உள்ளது.

தொடர் மழை பெய்யும் நாட்களில் குஜிலியம்பாறையை அடுத்துள்ள ராமகிரி, தளிப்பட்டி மலையடிவார பகுதியில் இருந்து வரும் மழைநீர் இந்த கம்புகுத்தி கவுண்டன் குளத்தில் வந்து சேரும். இக்குளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் குஜிலியம்பாறை, சி.அம்மாபட்டி, கம்புகுத்தியூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவ.11ம் தேதியை தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை பெய்தது.

இதில் கம்புகுத்தி கவுண்டன் குளம் நிரம்பி, தண்ணீர் மறுகால் பாய்ந்து கரை பகுதி வழியே வெளியேறியது. இதில் கரை பகுதியின் ஒரு பக்கத்தில் லேசாக கசிவு ஏற்பட்டது. பின்னர் குளத்தில் மழைநீர் வரத்து அதிகரிக்க துவங்கியதால், நீர்கசிவு ஏற்பட்ட கரை பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டது. தற்போது உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேறியமழைநீரை கண்டு, கம்புகுத்தியூர் கிராம மக்கள் அச்சம் அடைந்து, இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் தற்காலிகமாக அடுக்கி வைக்கப்பட்டது.

தற்போது வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிய துவங்கியுள்ளது. இதனால் கரை பகுதியில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில், வெளியேரும் மழைநீர் கம்புகுத்தியூரில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்து விடும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு வெளியேறும் மழைநீர் கால்வாய் ஓடை வழியே கண்ணுமேய்க்கிபட்டியில் உள்ள வெள்ளச்சிகவுண்டன் குளத்திற்கு சென்றடையும்.

ஆனால் வெள்ளச்சிகவுண்டன் குளம் ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து, அப்பகுதி சாலைகளை மூழ்கடித்தது. இந்நிலையில், கம்புகுத்திகவுண்டன் குளத்தில் இருந்து மழைநீர் வெளியேறி கண்ணுமேய்க்கிபட்டி வெள்ளச்சிகவுண்டன் குளம் சென்றடையததால் அப்பகுதி விவசாய நிலங்கள், சாலைகளில் மழைநீர் சூழ்ந்து பெரும் சேதம் அடைய வாய்ப்புள்ளது. எனவே கம்புகுத்திகவுண்டன் குளத்தில் ஏற்பட்ட லேசான உடைப்பை சரிசெய்து, குளத்தின் கரையை பலப்படுத்தி மழைநீர் வெளியேறாமல் தடுத்து நிறுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்புகுத்தியூர் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கம்புகுத்தியூரை சேர்ந்த விவசாயி மருதமுத்து கூறுகையில், ‘கம்புகுத்தி கவுண்டன் குளத்தில் ஏற்கனவே கலிங்கி பராமரிப்பு இல்லாமல் போனதால் சேதமடைந்தது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் கடந்த நவ.11 தேதி பெய்த கனமழை பெய்தததில் கலிங்கி அமைந்துள்ள குளத்தின் கரை பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மழைநீர் வெளியேறியது. இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 15 மணல் மூட்டைகளை அடுக்கி விட்டு சென்றனர்.

பின்னர் அடுத்தடுத்த பெய்த தொடர் மழையால் மணல் மூட்டை சரிய துவங்கி, உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து மழைநீர் வெளியேறி செல்கிறது. இவ்வாறு மழைநீர் தொடர்ந்து வெளியேறினால் உடைப்பு ஏற்பட்ட கரை பகுதியில், பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு குளம் உடையும் அபாயம் ஏற்படும். குளம் உடையும் பட்சத்தில் இதிலிருந்து வெளியேரும் மழைநீர் கம்புகுத்தியூர் குடியிருப்பு பகுதியில் புகுந்து மிகப்பெரிய அளவிலான சேதத்தை உண்டாக்கும். மேலும் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடைப்பு ஏற்பட்ட குளத்தின் கரையை பலப்படுத்தி மழைநீர் வெளியேறாமல் தடுக்க நிரந்தர தீர்வு காண பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Slight breach in Kujiliampara Kambukuthi Counton Pond
× RELATED திட்டக்குடி அருகே பரபரப்பு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு