இரண்டாம் சீசன் நிறைவடைந்த போதிலும் மலை ரயிலில் குறையாத பயணிகள் கூட்டம்

ஊட்டி: இரண்டாம் சீசன் முடிந்து பல நாட்கள் ஆன போதிலும் ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளது. நீலகிரி  மாவட்டத்திற்கு நாள் தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில்  இருந்து பல ஆயிம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசனான  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றம் அக்டோபர் மாதங்களில் அதிகளவு சுற்றுலா  பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்விரு மாதங்கள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா  பயணிகளை காட்டிலும், வடமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படும்.

இதனால் ஊட்டியில் உள்ள ஓட்டல் உணவு மற்றும் லாட்ஜ் அறை கட்டணங்கள் உயர்த்தப்படும். இருந்த போதிலும், வெளி நாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிள் வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இவர்கள், இங்குள்ள சுற்றுலா தலங்களை மட்டும் கண்டு ரசித்து செல்லாமல், இங்குள்ள மலை ரயிலிலும் பயணிப்பதில் ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த இரு மாதங்களாக ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், இரண்டாம் சீசன் முடிந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் இம்முறை ஊட்டி வரும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, ஊட்டியில் இருந்து குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் சீசனனின் போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. ஆனால், இம்முறை இரண்டாம் சீசனின் போது சுற்றுலா பயணிகள் வருகை  அதிகமாக உள்ளது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாள் தோறும் ஊட்டி மலை ரயில் சுற்றுலா பணிகள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.

Related Stories: