×

தியாகதுருகம் பகுதியில் தொடர் மழையால் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து  வரும் தொடர் கனமழை காரணமாக தியாகதுருகம் மற்றும் அதன் சுற்று வட்டார  பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி, உளுந்து போன்ற  பயிர்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. தியாகதுருகம் அடுத்துள்ள  எறஞ்சி மற்றும் கூத்தக்குடி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் வடகிழக்கு பருவமழையால் காற்றில்  சாய்ந்தும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மூழ்கியும் சேதமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையில் திகைத்துள்ளனர். தியாகதுருகம் வட்டாரத்தில் மானாவாரி பயிராக விவசாயிகள் பயிர் செய்துள்ள மக்காச்சோளப் பயிர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படைப்புழு தாக்குதலால் வளர்ச்சி பாதித்திருந்தது. இந்நிலையில் விவசாயிகள் கடன் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் இடுபொருட்களை வைத்து பயிர்களை காப்பாற்றி பராமரித்து வந்தனர். தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக முற்றிலும் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

அப்பகுதி விவசாயிகள் கடந்த 2, 3 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 450 ரூபாய் வீதம் செலுத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் பயிர் காப்பீடு தொகை செலுத்தி உள்ளதாகவும், தற்போது இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiagadurugam Region , Maize Crops Damaged by Continuous Rains in Thiagadurugam Region: Farmers Suffer
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...