×

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வருகிற 20ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில்  இன்று காலை  புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 19ஆம் தேதி வாக்கில் மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை,  தெற்கு ஆந்திரா மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரக்கூடிய 4  நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற பிறகு அடுத்த 3  தினங்களுக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதால் 17,  18 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 19ஆம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வருகிற  20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நவம்பர் 20ஆம் தேதி கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான செங்கல்பட்டு,  கடலூர்,  விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை,  நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சாவூர் உள்ளிட்ட 7  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்,  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நவம்பர் 21ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  விழுப்புரம் ஆகிய  மூன்று மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை  மையம் தெரிவித்திருக்கிறது.  அன்றைய தினம் வட தமிழக மாவட்டங்களான திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  திருவாரூர் ஆகிய  ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும்,  காலை நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும்,  பகல் நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

Tags : Tamil Nadu ,Cuddalore ,Viluppuram ,Meteorological Inspection Centre , 7 districts including Cuddalore and Villupuram in Tamil Nadu are likely to receive heavy rain on the 20th: Met Office Information
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்