×

திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

மதுரை: திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர்  வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தில் உள்ள மறவன்குளம் பகுதியில் கடந்த 2006ம் ஆண்டு அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் முதன்முறையாக திருமங்கலத்தில் தான் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மிகுந்த சேதமடைந்த ஹோமியோபதி மருத்துவ கல்லூரி கட்டிடம் குறித்து மாணவ மாணவிகள் புகார் அளித்த நிலையில் அதற்கு அப்போதைய அதிமுக அரசு செவி சாய்க்காமல் காலதாமதம் ஏற்படுத்தியது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தியபோது இடிந்த மற்றும் சேதமடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி பாதிக்காத வகையில் விருதுநகரில் உள்ள அரசுக்கல்லூரி அருகே தற்காலிக கட்டிடத்தில் மாணவ மாணவிகள் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அதற்கான ஆணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இக்கல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவ மாணவிகள் அங்கு தங்களுக்கு போதிய இடமில்லை எனவும் விடுதி வசதிகள் இல்லை எனவும் கூறி மருத்துவ கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் கூறுகையில், புதிய கட்டிடத்திற்கு ஓரிரு வருடங்கள் ஆகும் எனவும் அதுவரை  விருதுநகரில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் கல்வி கற்குமாறு மாணவ மாணவிகளிடம் கூறினார்.

இந்நிலையில் அதற்கு மாணவ மாணவிகள் ஒப்புதல் அளிக்காத நிலையில் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி அலுவலக வாயிலின் முன்பு மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Government Homeopathic Medical College ,Thirumangalam , Students of Government Homeopathic Medical College in Thirumangalam are protesting by boycotting classes
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்