×

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு; மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து 12வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

அம்பை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தின் மணிமுத்தாறு, மாஞ்சோலை வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை கடந்த 5ம்தேதி முதல் தடை விதித்துள்ளது.  
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் 12வது நாளாக நேற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவி பகுதியினை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும்,

மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்தின் தன்மையை பொறுத்து இன்னும் சில தினங்களில் நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்கிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை ெபய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வரவில்லை. இதனால் பாதுகாப்பு கருதி 3வது நாளாக நேற்றும்  மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதே வேளையில்  ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படவில்லை. மெயினருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளான சுற்றுலா பயணிகள், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில்  குளித்து சென்றனர்.

களக்காடு தலையணையில் குளிக்க மீண்டும் தடை
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழையால் தலையணையில். கடந்த 5ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்தது. தலையணை தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு பெய்த மழைய காரணமாக தலையணையில் நேற்று காலை மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுகிறது என்று வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Tags : Manimutthar , Increased water flow due to continuous rains; Bathing ban at Manimutthar falls for 12th consecutive day: Tourists disappointed
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!