×

கர்நாடகாவில் இருந்து இடம் பெயர்ந்த 150 யானைகள் ஜவளகிரி வனச்சரகத்தில் முகாம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

தேன்கனிக்கோட்டை: கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த 150 யானைகள் ஜவளகிரி வனச்சரகத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வன உயிரின பூங்காவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 150க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான இடம் பெயர்வு கடந்த மாதம் துவங்கியது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக இடம் பெயர்ந்த 150க்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனச்சரகத்திற்கு இதுவரை இடம் பெயர்ந்துள்ளன.

அவற்றின் நடமாட்டத்தை ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஜவளகிரி வனச்சரக பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த 25க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு சென்றுள்ளன. அதேபோல், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு 20 யானைகளும், ஓசூர் வனச்சரகத்திற்கு 15 யானைகளும், ஜவளகிரி வனச்சரக பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ளன. ஜவளகிரி வனச்சரக பகுதியில் தற்போது 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

யானைகள் இடம் பெயர்வு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், ஓசூர் வனச்சரகர் ரவி, ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தங்களது வனச்சரக பகுதியில் உள்ள யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

சிப்காட் பகுதியில் 3 யானைகள் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி, பனகமுட்லு, பிக்கனப்பள்ளி, மேலுமலையை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக 3 யானைகள் முகாமிட்டு, விவசாய பயிர்களை நாசப்படுத்தி வந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டதால் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் முகாமிட்டது.

இதையடுத்து கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு யானைகள் வந்துவிடக்கூடாது என வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி விளைநிலங்களின் வழியாக மீண்டும் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்கு சென்று, தற்போது அங்கு முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை மேலுமலை வனப்பகுதிக்கு அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Karnataka ,Javalagiri forest , 150 elephants migrated from Karnataka camp in Javalagiri forest: Forest department keeps vigilance
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...