தற்போது மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: மும்பையில் ராகுல்காந்தி பேச்சு

மும்பை: 70-வது நாளாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக பேசினார். மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக கடந்த 7-ந் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. ராகுல்காந்தியின் நாடு தழுவிய நடைபயணம் நேற்று 70-வது நாளை எட்டியது. மராட்டியத்தில் அவர் 10-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார்.

வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா என்ற இடத்தில் இருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கியது. அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இரவில் அகோலா மாவட்டத்தை சென்றடைந்தனர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைமையிலான அரசு கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து சாதாரண குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களின் நிலைமையை மேம்படுத்தியது.

ஆனால் தற்போது மோடி அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் திண்டாடுகிறார்கள். விவசாயிகளின் முதுகெலும்பையும் ஒன்றிய அரசு உடைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார். நாளை புல்தானாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேச உள்ளார். மராட்டியத்தில் 20-ந் தேதியுடன் நடைபயணம் நிறைவு பெறுகிறது. பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

Related Stories: