அரசு கலை கல்லூரிகளில் ரூ. 1,000 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து உயர்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறுகையில்: கலை கல்லூரிகளில் 25 சதவிகித இடம் கூடுதலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக 1,53,323 இடங்கள் புதிதாக  உருவாக்கப்பட்டன. அவற்றில் தற்போதுவரை 1,31,173 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு கலை கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் 7 கல்லூரிகளையும் நாங்கள் கட்டி வருகிறோம்.

*டிசம்பரில் செமஸ்டர் தேர்வு

அமைச்சர் பொன்முடி மேலும் கூறுகையில், ‘‘அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு ஆண்டு இறுதியில் தாமதமாக நடத்த  திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: