×

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் எதிர்த்த வழக்குகள் வாபஸ்

சென்னை:  ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், சட்டத்தை ரத்து செய்யக் கோரியும்  மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில்  ஐகோட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அது அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தொடர எந்த காரணமும் இல்லை.

அவசர சட்டத்துக்கு பதிலாக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டனர்.  இந்த வாதங்களை கேட்ட  நீதிபதிகள், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த வழக்கு தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை என்றனர்.  அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரினர். அதை நீதிபதி அனுமதிதார்.


Tags : Tamil Nadu government , Cases against the Tamil Nadu Government's Ordinance banning online gaming withdrawn
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...