×

உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக்குதல் வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள 147 பெரிய உயிரியல் பூங்காக்களில் மேலாண்மை, செயல்திறன், மதிப்பீடு ஆகியவற்றின்கீழ் - வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலங்களில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பூங்காவிற்கு வருமானம் இல்லாதபோது, உயிரியல் பூங்காவின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூபாய் 6 கோடியை ஒதுக்கியது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பாராட்டப்பட்டன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

உயிரியல் பூங்காக்கள், விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குவதைத் தவிர, அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வனவிலங்குப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உயிரியல் பூங்காக்கள், ஆதரவற்ற விலங்குகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகவும் செயல்படுவதன் மூலம் உயிரியல் பூங்காக்கள் வனவிலங்கு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குறிப்பாக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் ஆகியோர் பூங்காவின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில்,இயற்கை வளங்களின் சிறந்த மற்றும் அதிகபட்ச பயன்பாட்டை ஒருங்கிணைத்து மத்திய உயிரியல் பூங்கா ஆணைய விதிகளின்படி நீண்ட காலத் திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுகாதாரமான சூழலை உருவாக வேண்டும்.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அறிவியல் மேலாண்மை நடைமுறைகள், சிறந்த பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் பரிமாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க விரும்புகிறேன். உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பூங்கா நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில், உயிரியல் பூங்காவானது மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து, சாய்தளப் பாதைகள்,சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியான வாகனங்கள் மற்றும் பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகவல் சாதனங்கள்ஆகிய வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைத் தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

வனவிலங்குகள் மற்றும் வனஉயிரினப் பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த மன உறுதியோடு இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கூட்டத்தில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத் தலைவர்) சையத் முஜம்மில் அப்பாஸ்,முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாஸ் ஆர். ரெட்டி, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் கௌசல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்செல்வகுமார், வனத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : CM K. Stalin , Zoo should create safe and sanitary environment for animals, Chief Minister M.K.Stalin, speech
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;...