×

தென்பெண்ணை நீர் பங்கீடு 4 வாரத்தில் நடுவர் மன்றம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: தென்பெண்ணையாறு நீர்பங்கீடு விவகாரத்தில் அடுத்த 4 வாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாக தென்பெண்ணையாறு உள்ளது. இதன் கிளை நதியாக உள்ள மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது.

இதனால், தென்பெண்ணையாறு விவகாரம்  தொட்பாக நடுவர் மன்றம் அமைக்கும்படி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடர்ந்தது. அதில், ‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் பிரச்னையை தீர்க்க, நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். அணை கட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது.

நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைக்கிறது? இந்த வழக்கில் நிவாரணம் வேண்டுமா? அல்லது பிரச்னையாகவே இதை வைத்திருக்க விரும்புகிறீர்களா?’ என ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் கேட்டனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, உமாபதி மற்றும் குமணன் ஆகியோர், ‘தென்பெண்ணையாறு பிரச்னையில் ஒன்றிய அரசு உரிய நேரத்தில்  முடிவு எடுக்க மறுக்கிறது. எனவே, நடுமன்றம் அமைப்பதுதான் இதற்கு தீர்வு. அதை விரைவாக  அமைக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரினர்.

 ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘தென்பெண்ணையாறு நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க. 4 வாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்கிறோம். அது குறித்த அறிவிப்பாணையும் விரைவில் வெளியிடுகிறோம்,’ என தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள், ‘நதிநீர் பங்கீட்டில் அரசியல் வேண்டாம். அதை கலக்கவும் கூடாது,’ என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : South Penna Water ,Union Govt ,Supreme Court , Tenpenbanai water, 4th week, arbitration: Supreme Court, Union Govt, upheld
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...