×

ஒரே இரவில் 100 ஏவுகணைகளை வீசிய ரஷ்யா உக்ரைன் ஏவுகணை போலந்தை தாக்கியது: சோவியத் காலத்தை சேர்ந்தது என்பதால் குழப்பம்

போலந்து: ரஷ்ய படைகள் மீது உக்ரைன் வீசிய ஏவுகணை, போலந்தில் விழுந்ததில் 2 பேர் பலியாகினர். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 9 மாதத்துக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. சமீபத்தில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்சனை மீட்டது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ், கார்கீவ் உள்ளிட்ட பல நகரங்களின் மீது ரஷ்ய ராணுவம் நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி தாக்கியது. இந்நிலையில், சோவியத் கால ஏவுகணை ஒன்று, போலந்து நாட்டில் தாக்கியதில் 2 பேர் பலியாகினர். ரஷ்யாதான் இந்த ஏவுகணையை வீசியதாக முதலில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு ரஷ்ய தூதருக்கு போலந்து அரசு சம்மன் அனுப்பியது. போலந்து நாடு நேட்டோ அமைப்பில் உள்ளது. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நேட்டோ கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதில் தாக்குதல் நடத்தும். இதையடுத்து, இந்தோனேஷியாவில் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பைடன், நேட்டோ தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போலந்தை தாக்கிய ஏவுகணையை ரஷ்யா வீசவில்லை என்பது விசாரணையில் உறுதியானது. இது குறித்து போலந்து அதிபர் ஆன்ட்ரெஜ் டுடா கூறுகையில், ‘இது, ரஷ்யா நடத்திய தாக்குதல் இல்லை. உக்ரைன் ராணுவம் பல்வேறு திசைகளில் இருந்து ஏவிய ஏவுகணைகளில் ஒன்று, திசை மாறி போலந்தில் தாக்கியது. இந்த ஏவுகணை, உக்ரைனிடம் இருந்த சோவியத் யூனியன் காலத்து ஏவுகணை என தெரிய வந்துள்ளது,’ என தெரிவித்தார். அமெரிக்காவும் இதை உறுதி செய்தது.


Tags : Russia ,Ukraine ,Poland , Russia fires 100 missiles overnight Ukraine missile strikes Poland: Confusion over Soviet era
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...