ஆதரவற்றோருக்கு உதவுவதற்காக மாதத்திற்கு ஒருமுறை வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் கைது

தாம்பரம்: புதுபெருங்களத்தூர், சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (55). கடந்த 4ம்தேதி இவரது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 சவரன் கொள்ளை போனது. இதுகுறித்து, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வரதராஜன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த அப்புராஜ் (எ) அப்பு (33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், எழும்பூர் பகுதியில் இருந்து மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ரயில் மூலம் வந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததாகவும், பெருங்களத்தூர் பகுதியில் மட்டும் கடந்த 4 மாதத்தில் மாதம் ஒருவீடு என 4 வீடுகளில் கொள்ளையடித்து, நகைகளை விற்று சாலையோரம் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அவரிடம் இருந்து 11 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* சிறை செல்வது மகிழ்ச்சியே..

குற்றவாளியான அப்பு, கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாதம் ஒருவீடு என மட்டுமே கொள்ளையடித்து சாலையோரம் மற்றும் ரயில் நிலையம் அருகே வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ந்து வந்தேன். அதற்காக சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: