உணவு பாதுகாப்பு துறையின் புதிய சட்டங்கள் கார்பரேட் கம்பெனிக்கு துணைபோகிறது: ஏ.எம்.விக்கிரமராஜா குற்றச்சாட்டு

பூந்தமல்லி: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் புதிய சட்டங்கள் கார்பரேட் கம்பெனிகளுக்கு துணைபோகிறது என ஏ.எம்.விக்கிரமராஜா குற்றம் சாட்டினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தென்சென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் வானகரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொருளாளர் சதகத்துல்லா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம் பங்கேற்று, புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினர்.

பின்னர் நிருபர்களிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது: சென்னை உள்பட தமிழகத்தில் சிறுகடை வியாபாரிகளிடம் டெஸ்பேச்சர் முறையில் வணிகவரி துறை அதிகாரிகள் அதிகளவு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது தன்னிச்சையாக புதிய சட்டங்களை போட்டு வியாபாரிகளை துன்புறுத்தி வருகின்றனர். இதனால் புதிய சட்டங்கள் மூலமாக கார்பரேட் கம்பெனிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் துணை போகிறார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து, முதல்வரை சந்தித்து முறையிடுவோம். இதன் மீது உரிய நடவடிக்கை இல்லையெனில், வியாபாரிகள் போராடுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில நிர்வாகிகள் ராஜசேகர், சுப்பிரமணி, முருகன், கோதண்டன், சார்லஸ், பூவை கந்தன், பாண்டியராஜன், மாவட்ட நிர்வாகிகள் நீலமேகம், பழனியப்பன், திருமலை, ஜான் நிக்கோஸ், செல்வம், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: