தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம் மழைக்கால உபகரணங்கள் வாங்க ரூ.5.15 கோடி ஒதுக்கீடு: 60 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல அலுவலகம் பெருங்களத்தூர் பகுதியில் உள்ளது. இங்கு மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் டி.காமராஜ் தலைமையில் நடந்தது. இதில் நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் உள்பட 4வது மண்டலத்திற்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சாலை அமைத்தல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீர் விநியோகம், மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு, பதிலளித்த மண்டல தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான பொக்லைன் இயந்திரங்கள், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், மணல் மூட்டைகள் என தயார் நிலையில் வைத்திருந்து, பொதுமக்களுக்கு மழை பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து, சிறப்பாக செயல்பட்ட  தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உபகரணங்கள் வாங்குவதற்கு, சின்டெக்ஸ் தொட்டியுடன் மின் மோட்டார் அமைத்தல், சிறிய கோபுர மின்விளக்கு அமைத்தல், பழுதடைந்துள்ள சாலைகளை மாற்றியமைக்க, சிறு மின்விசை பம்ப் அமைக்க, மழைநீர் வடிகால்வாய் அமைக்க, பூங்கா புதுப்பிக்க, கால்வாய் துர்வாரி சுத்தம் செய்ய, குடிநீர் குழாய் அமைக்க, சிறு பாலம் சீரமைக்க என மொத்தம் சுமார் ரூ.5 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் 60 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.

அதோடு, 4வது மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் இணைப்பு இல்லாமல் விடுபட்டிருந்த மழைநீர் வடிகால் கால்வாய்களுக்கு, உடனடியாக இணைப்புகள் வழங்கவும், மழைக்காலங்களில் மழைநீர் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் எனவும், குடிநீர் கட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க புதிய குடிநீர் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வேண்டுமென அதிகாரிகள் மற்றும் மாவட்ட உறுப்பினர்களுக்கு, மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உத்தரவிட்டார்.

Related Stories: