புழல்-வடபெரும்பாக்கம் இணைப்பு தரைப்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: புழல்-வடபெரும்பாக்கம் பகுதியை இணைக்கும் புழல் ஏரி கால்வாய் தரைப்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புழல் -வடபெரும்பாக்கம் பகுதியை இணைக்கும் புழல் ஏரி உபநீர் கால்வாய் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த வழியாக, புழல் பாலாஜி நகர், சக்திவேல் நகர், கதிர்வேடு, சூரப்பட்டு, புத்தகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் மாதவரம், மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் புழல் ஏரியில் இருந்து அதிகளவில் உபநீர் திறந்து விடப்பட்டதால் பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத சாலையாக மாறியது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பாலப் பணிகள் 90% முடிந்த நிலையில் உள்ளது. மீதமுள்ள பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனியார் இடங்களை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

தனியார் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு முடிந்த பிறகு தான் பாலப் பணிகள் முழு அளவில் நடைபெறும் என மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய அவலநிலை உள்ளது. எனவே தமிழக அரசின் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழக்கை விரைந்து முடித்து பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: