ஜப்பானிய நிறுவன உதவியுடன் ரூ.920 கோடியில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்: மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வன உயிரின வாரிய கூட்டத்தில் ஆற்றிய உரை: இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது. இவை மட்டுமின்றி வன உயிரினங்களிலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானைகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என நமது மாநிலம் வன உயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கடல்பசுக்களைப் பாதுகாக்க கடல்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது. கழுவேலி பறவைகள் காப்பகம், அகத்தியர்மலை யானைகள் காப்பகம், நஞ்சராயன் குளம் பறவைகள் காப்பகம், காவேரி தெற்கு காட்டுயிர்க் காப்பகம் போன்றவற்றை நமது அரசு குறுகிய காலத்தில் அறிவித்துள்ளது என்பது பெருமைக்குரியது. இன்று “தமிழ்நாட்டினுடைய வன உயிரின வளமை” குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், “யானைகள் இறப்பில் பின்பற்ற வேண்டிய தணிக்கை முறைகள்” குறித்தும் இங்கு இந்த புத்தகம் வாயிலாக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய புத்தகம் இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படுவதாக அறிகிறேன்.

வனவிலங்குகளின் வேட்டை / கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வன மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு நமது அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாநிலத்தில் 3 மண்டலங்களிலும் குற்றத்தடுப்புப் பிரிவுகள் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு யானைகளைக் கண்காணிக்கும் வனக்காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும், வேட்டைத்தடுப்பு முகாம்களை அமைப்பதற்கும், ஆளில்லா வாகனங்கள்/ ஆளில்லா விமானங்கள் / இரவு பார்வை கேமராக்களை வாங்குவதற்கும், வேட்டைத் தடுப்புப் படைகளை உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் என 2 கோடியே 41 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளது. இது போன்ற ஒரு முறையான அறிவியல் அணுகுமுறை மூலம் மனிதர்-யானை மோதல்களை குறைக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இது மட்டுமின்றி வன உயிரின வாழ்விடங்களை மேம்படுத்தும் பொருட்டு, சுமார் 282 எக்டேர் பரப்பளவுள்ள வனப்பரப்பில் அந்நிய களைத்தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் நமது அரசு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை 920 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயற்கை வள ஆதாரங்களை அதிகரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வனநிலம் மற்றும் வன உயிரின வாழ்விடங்களின் தரம் குன்றுதலை தடுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் நபார்டு நிதி உதவியுடன் தரம் குன்றிய வன நிலப்பகுதிகளை மீளுருவாக்கம் செய்தல், மீளுருவாக்கத் திட்டத்திற்கு 481 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று பேசினார்.

Related Stories: