காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழக கடலோர பகுதிகளில் அதி கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: வங்கக்கடலில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெறும் என்றும் அது இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடலோரப் பகுதியில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, தற்போது வங்கக் கடலில் வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. 19ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வரும். அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் வாய்ப்பும் உள்ளது. அதனால்,  தமிழகத்தில் 20ம் தேதி  முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

மேலும், இன்று முதல் 19ம் தேதி வரை  தமிழகம் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: