×

முதல் ஒருநாள் போட்டியில் இன்று ஆஸி. - இங்கிலாந்து மோதல்

அடிலெய்டு: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி டி20  உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இங்கிலாந்து அணி, அடுத்து ஆஸி. அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று அடிலெய்டிலும், 2வது போட்டி நவ.19ம் தேதி சிட்னியிலும், 3வது ஒருநாள் நவ.22ம் தேதி மெல்போர்னிலும் நடைபெற உள்ளன. டி20 உலக கோப்பைக்கு பிறகு நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் இது. சொந்த மண்ணில் நடந்த தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஆஸி. அணி, அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றியை குவிக்க வேண்டிய கட்டாயத்துடன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணி களமிறங்குகிறது. டி20ல் புதிய உலக சாம்பியன் என்பதுடன், ஒருநாள் கிரிக்கெட்டின் நடப்பு உலக சாம்பியனாகவும்  உள்ள இங்கிலாந்து அணிக்கும் அந்த அந்தஸ்துக்கு ஏற்ப சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி இருக்கிறது. உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அடிலெய்டில் முதல் ஆட்டம் நடப்பது இங்கிலாந்துக்கு சாதகமான அம்சமாக இருக்கலாம்.

நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 152 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் ஆஸி. 84 - 63 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 5 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள்  கைவிடப்பட்டன, 2 ஆட்டங்கள் சரிநிகர் சமனில் (டை) முடிந்துள்ளன.

கடைசியாக: கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் ஆட்டங்களில் ஆஸி. 4 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. இங்கிலாந்து 2 வெற்றி, 3 தோல்வி என சற்று தடுமாறியுள்ளது. இந்த 2 அணிகளும் 2 ஆண்டுகள், 2 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் மோத உள்ளன.

ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்), அபாட், ஏகார், கேரி, கிரீன், ஹேசல்வுட், ஹெட், லாபுஷேன், மிட்செல் மார்ஷ், ஸ்மித், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், வார்னர், ஸம்பா.

இங்கிலாந்து: பட்லர் (கேப்டன்), மொயீன், பில்லிங்ஸ், சாம் கரன், டாவ்சன், ஜார்டன், மலான், ரஷித், ஜேசன் ராய், ஃபில் சால்ட், ஸ்டோன், வின்ஸ், வில்லி, வோக்ஸ், லூக் வுட்.

Tags : Aussies ,England , Aussies today in the first ODI. - England conflict
× RELATED ஆஸிக்கு 279 ரன் இலக்கு: 4 விக்கெட் இழந்து திணறல்