×

உலக திறன் போட்டிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றிபெற பயிற்சி அளிக்க வேண்டும்: அதிகாரிகளுடன் அமைச்சர் சி.வி.கணேசன் ஆலோசனை

சென்னை: உலக திறன் போட்டிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றிபெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் ஆலோசனை வழங்கினார். சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக தலைமை அலுவலகத்தில் நேற்று, திறன் மேம்பாட்டிற்கான ‘நான் முதல்வன்’  திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச திறன் பயிற்சி திட்டங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.

ஒன்றிய அரசின் திட்டமான சங்கல்ப் மற்றும் பிரதான் மந்திரி கவுசல்ய விகாஸ் யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். மாவட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக வடிவமைக்கவும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தருவதை உறுதிசெய்வது 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக திறன் போட்டிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றிபெறும் வகையில் மாவட்ட திறன் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கும் அமைச்சர் மாவட்ட உதவி இயக்குநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக  பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு  நவீன தொழில்நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென துவங்கப்பட்ட இணையதளத்தில் (www.naanmudhalvan.tn.gov.in) இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 372 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்களுக்கு இன்றைய தொழில்துறையின் தேவைக்கேற்ப 19 பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு தமிழகமெங்கும் 5 கட்டங்களாக அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கப்பட்டு டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை  அமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, நான் முதல்வன் திட்டத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெயபிரகாசன், திறன் மேம்பாட்டுக்கழக மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister CV ,Ganesan , Tamil Nadu students should be trained to succeed in world skill competitions: Minister CV Ganesan advises officials
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...