பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு முயற்சி: ஆளுநர் பேச்சு

சென்னை: பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை ஆளுநர் மாளிகையில், ‘பழங்குடியின பெருமை தின விழா’ நேற்று நடந்தது. விழாவில் 8 பள்ளிகளை சேர்ந்த 186 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். விழா தொடக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மிர்சா முண்டாவின் உருவப்படத்துக்கு  ஆளுநர் மற்றும் மாணவ, மாணவியர் மலர்தூவி  மரியாதை செய்தனர்.

பின்னர், ஆளுநர் வழங்கி பேசியதாவது: நாட்டில் பல்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களிடையே நிறைய உட்பிரிவுகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில்தான் அவர்கள் இதுபோல பழங்குடியினர் என பிரிக்கப்பட்டு, அவர்களை பல்வேறு தொழில்களில் அடிமைகளாக நடத்தினர். அதனால்தான் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீவிரமாக போராட்டங்களை நடத்தி தங்கள் உயிரையும் நீத்தனர். அவர்களில் முக்கியமானவர்தான் வங்காளத்தில் போராட்டிய வீரர் மிர்சாமுண்டா. அவரை போல பலர் வெளியில் தெரியாமல் இருக்கின்றனர்.

அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்  இந்த விழா கொண்டாடப்படுகிறது. பழங்குடியினரைப் போலவே, ஆங்கிலேயர்கள் காலத்தில் திராவிடர், ஆரியர் என்றும் பஞ்ச திராவிடர்கள் என்றும் குறிப்பிடப்பட்டதை இன்றும்  பின்பற்றி  வருகிறார்கள். வடக்கில் இருப்பவர்கள் ஆரியர்கள் என்றும், தெற்கில் இருப்பவர்கள் திராவிடர்கள் என்றும் குறிப்பிட்டு இன்னும் நமது பாடப்புத்தகத்தில் படித்து வருகிறோம். பழங்குடியினர் இடையே செயற்கையான  வகைப்படுத்துதலை ஆங்கிலேயர் செய்தனர். இதை ஏன் அவர்கள் செய்தார்கள் என்று கேள்வி என்னுள் இருக்கிறது.

இந்த வேறுபாடுகளை உடைத்து அவர்களை ஒரே இனத்தவர்களாக மாற்ற வேண்டும்.  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தமிழகத்தில் 8 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதில் 8 லட்சம் பேர் பழங்குடியினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது மாநில அரசின் நடவடிக்கை. இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. விரைவில் அது நடக்கும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Related Stories: