×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழை தொடர்கிறது; சதம் அடிக்கும் நிலையில் சேர்வலாறு அணை: ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பான மழை தொடர்ந்து காணப்படும் நிலையில், இன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுநாள் வரை பலத்த மழை பெய்யாவிட்டாலும், ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றும் 3 மாவட்டங்களிலும் பல்ேவறு இடங்களில் இயல்பான மழை காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்தது. நெல்லை மாநகரை பொறுத்தவரை நேற்று காலை காலை முதலே வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டது. பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கிய மழை அரைமணி நேரம் வெளுத்துகட்டியது. இதனால் நெல்லை, பாளை பகுதி சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், டவுன் ரதவீதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஒருசில இடங்களில் மழை தூறிவிட்டு சென்றது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 7மணி நேர நிலவரப்படி மழை அளவு விபரம்: அம்பாசமுத்திரம் 1மிமீ,  மணிமுத்தாறு 5.40மிமீ, களக்காடு 4.60, நாங்குநேரி 3.60, பாபநாசம் 30 மிமீ, மணிமுத்தாறு 5.40, பாளை 4, நெல்லை 4.60 மிமீ மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 89.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1658.54 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 768.50 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 93.44 அடியாக இருந்த நிலையில், இன்று 6 அடி உயர்ந்து 99.08 அடியானது. அணை சதம் அடிக்கும் சூழலில், அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ளது.
 
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 77.10 அடியாக உள்ளது. அணைக்கு 626 கனஅடி நீர் வருகிறது. 35 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையில் நீர் இருப்பு 13.25 அடியாகவும், நம்பியாறு அணையில் நீர் இருப்பு 12.49 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 48.50 அடியாகவும் உள்ளது.
 
தென்காசி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சீராக உள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 73.50 அடியாக உள்ளது. ராமநதி நீர்மட்டம் 72.50 அடியாகவும், கருப்பா நதி நீர்மட்டம் 53.81 அடியாகவும், அடவிநயினார் நீர்மட்டம் 82.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிவிட்டது. தென்காசி மாவட்ட மழை அளவு: கடனா அணை 40 மிமீ, கருப்பாநதி 60.50, தென்காசி 55, சிவகிரி 66, குண்டாறு 29.80, செங்கோட்டை 32.60, ஆய்குடி 88, சங்கரன்கோவில் 22மிமீ மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இயல்பான மழையே காணப்பட்டது. கழுகுமலையில் 25 மிமீ மழையும், வைகுண்டத்தில் 15.3 மிமீ மழையும், சாத்தான்குளத்தில் 9 மிமீ மழையும் பெய்தது. அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ள நிலையில், பலத்த மழையை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர்.

Tags : Nellai ,Tenkasi ,Tuticorin ,Chervalar , Rain continues in Nellai, Tenkasi, Tuticorin; Chervalar dam reaches 100: Rise of 6 feet in one day
× RELATED சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில்...