×

பாதிக்குப்பாதி இடங்கள்; அதிமுகவுக்கு பாஜக புதிய நிபந்தனை: அமித்ஷா வருகைக்குப் பிறகு தொகுதிகளில் வேலைகளை ஆரம்பித்த மூத்த தலைவர்கள்

சென்னை: பாதிக்குப்பாதி இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளதோடு, தொகுதிகளில் தாங்களாகவே வேலைகளையும் தொடங்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடங்கியது. முதலில் நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு மொத்தமாக சீட் கொடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரோ அதெல்லாம் முடியாது. தமிழகத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி. நாங்கள்தான் தொகுதிகளை ஒதுக்குவோம். உங்களுக்கு 5 சீட்டுதான். வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி தொகுதிகளை ஒதுக்கினார். அதில் பாமகவுக்கு 7, தேமுதிகவுக்கு 4, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கியது. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதன்பின்னர், 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இதே கோரிக்கையை வலியுறுத்தியது. அப்போதும் அதிமுக தன் தலைமையில்தான் கூட்டணி என்று அறிவித்து தொகுதிகளை ஒதுக்கியது. பாஜகவுக்கு 20, பாமகவுக்கு 23, தமாகாவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது. மற்ற உதிரி கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கியது. அதில் புரட்சி பாரதம் உள்ளிட்ட சில கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதித்தது.

அதிமுக ஆளும் கட்சியாக இருந்ததால் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை பாஜக பெற்றது. ஆனால் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை அதிமுக கூட்டணி இழந்தது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆளும் கட்சியாக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தன. இதனால் அதிமுக தலைவர்கள் பலர் வெளியேறி திமுகவில் இணைந்து விட்டனர்.

அதோடு அதிமுக தற்போது 4 அணிகளாக பிரிந்துள்ளன. ஒவ்வொரு அணி தலைவர்களும் தங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக தலைமையிடம் போய் நின்றனர். ஆனால் அவர்களோ ஒற்றுமையாக நில்லுங்கள் என்று அறிவுரை கூறினர். அதில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைவதற்கு சம்மதித்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பன்னீர்செல்வத்ைத இணைக்கத் தயார்.

ஆனால் அவர் பதவி கேட்கக் கூடாது. மற்ற இருவரும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனால் பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது. எடப்பாடியை தங்களது வழிக்கு கொண்டு வர அவருக்கு வேண்டிய கான்ட்ராக்டர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக உள்ளார்.

இந்தநிலையில்தான் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். ஆனால் மோடி அவரை சந்திக்கவில்லை. பியூஷ்கோயல் மூலம் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அப்போதும் அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷா கூறிவிட்டார். இதனால் 4 நாள் பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பி விட்டார். தற்போது மதுரை வந்த மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டார்.

ஆனால் மோடி மறுத்து விட்டார். கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டார். ஒதுக்கவில்லை. இதனால் அமித்ஷா கலந்து கொண்ட விழாவையே எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டார். இந்நிலையில் பாஜக மூத்த மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட சில தலைவர்களை மட்டும் தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இந்த முறை மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும். அதேநேரத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும். தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு பாஜகதான் சீட் ஒதுக்கும். செலவையும் பார்த்துக் கொள்ளும். அதிமுக அதற்கு ஏற்றார்போல 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

நாம் மற்ற கட்சிகளுக்கு இடங்களை பிரித்துக் கொடுக்கலாம். அதிமுக 50 சதவீத இடங்களில் போட்டியிடட்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதோடு அதிமுகவை வழிக்கு கொண்டு வரும் யுக்தி என்னிடம் உள்ளது. அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இப்போதே தொகுதிகளுக்கு சென்று வேலையை பாருங்கள். பூத் கமிட்டி அமையுங்கள். குறிப்பாக தலைவர்கள் நிற்கும் தொகுதிகளில் நீங்களே வேலையைப் பாருங்கள் என்று கூறிவிட்டார்.

குறிப்பாக நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் அல்லது ஈரோட்டில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், ராமநாதபுரத்தில் பொன்.பாலகணபதி, தேனியில் ரவீந்திரநாத், வேலூரில், ஏ.சி.சண்முகம், கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர், தென்காசியில் கிருஷ்ணசாமி உள்பட பலருக்கும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து, இந்த தொகுதிகளில் நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள். அதிமுக நாம் கேட்கும் தொகுதிகளை கொடுப்பார்கள். மீதம் உள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்ற கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் இப்போதே தொகுதிகளில் வேலைகளை தொடங்கிவிட்டனர். அதிமுகதான் தொகுதிகள் பற்றிய முடிவு எடுக்காமலும், அதிமுகவே இருக்குமா என்று தெரியாமல் குழப்பத்திலும் உள்ளார்கள். இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் உள்ளன. அதோடு தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அமித்ஷாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டால், பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிடும். இல்லாவிட்டால் அதிமுக என்ற கட்சி இல்லாமல் புதிய கட்சியின் பெயருடன் எடப்பாடி பழனிச்சாமி தனித்து போட்டியிடக் கூடிய நிலை ஏற்படும் என்று பாஜக தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Tags : Pathakhipadi ,Bajaka ,Amitsha , Half seats; BJP's new condition for AIADMK: Senior leaders who have started work in constituencies after Amit Shah's visit
× RELATED தேர்தல் பத்திரம்.....