×

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தகவல்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்  தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களில் இருந்து, பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app. ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதியினை பயன்படுத்திக் கொள்ளும்படி போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Sabarimala ,Government Rapid Transport Corporation ,Transport Minister ,S. S. Sivashankar , Government Transport Corporation, Sabarimala, Special Bus, Minister Sivashankar
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு