ரிஷி சுனக் - மோடியின் முதல் சந்திப்பை தொடர்ந்து 3,000 இந்தியர்களுக்கு ‘விசா’ அனுமதி: இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

லண்டன்: இந்தியாவில் இருந்து வரும் இளம் தொழில் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் பணிபுரிய 3,000 விசா வழங்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அனுமதி அளித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேசினார்.

சமீபத்தில் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர், முதன் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார். இவர்களது சந்திப்புக்கு அடுத்த சில மணி நேரங்களில் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கடந்தாண்டு இங்கிலாந்து - இந்தியா இடையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 3,000 விசா வழங்க பிரதமர் ரிஷி சுனக்  அனுமதி அளித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 30 வயதுடைய பட்டப்படிப்பு படித்த இந்தியப் பிரஜைகள் இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகள் வரை வசிக்க முடியும்; வேலை செய்யவும் முடியும். மேலும் இத்திட்டமானது இந்தியாவுடனான இருதரப்பு உறவுக்கும், இந்தோ-பசிபிக் பிராந்திய தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளவும் முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: