×

அண்ணாநகரில் போதை பொருள் விற்பனை; சிறையில் உள்ள ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணை காவலில் எடுக்க முடிவு: கும்பலை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் கடந்த 12ம் தேதி வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண், வாடகை காரில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார் என்று அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தபோது இரண்டு லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிராம் கோகையன் என்ற போதை பொருட்கள் வைத்திருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிர்ஸ்க்காஅம்சா(28) என்று தெரிந்தது. இவர் பெங்களூரூவில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து அதன்பின்னர் வாடகை காரில் அண்ணாநகர் பகுதிக்கு வந்துள்ளார் என்று தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் அந்த பெண் கூறுகையில், ‘’பெங்களூரூவில் வசித்துவந்த நான், கடந்த 2018ம் ஆண்டு முதல் கோகைன் போதை பொருட்கள் விற்பனை செய்து வருகிறேன். போலீசார் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக போதை பொருட்களை வாட்ஸ்அப் மூலம் பேசி விற்பனை செய்து வந்தேன்’’ என்று தெரிவித்தார். மேலும் இவருக்கு கோகையன் போதை பொருளை சப்ளை செய்தவர் மிக் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் வாட்ஸ்அப் மூலம் பேசிவிட்டு பெங்களூரூ, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து ஆப்பிரிக்க பெண்ணிடம் இருந்து 10 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கோகைன் போதை பொருளை சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளியை கைது செய்யவும் வாட்ஸ்அப் மூலம் பேசிய போன் நம்பர்களை கண்டறிந்து அந்த கும்பலை பிடிக்கவும் அண்ணாநகர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில், ஆய்வாளர்கள் கோபாலகுரு, மஞ்சுளா, உதவி ஆய்வாளர் செல்லதுரை உள்ளனர்.

இவர்கள் பெங்களூரூ, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி பகுதிகளுக்கு சென்று பிர்ஸ்க்கா அம்சா வாட்ஸ்அப்பில் பேசிய போன் நம்பர் மூலம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் போதை பொருட்கள் கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சிறையில் உள்ள பிர்ஸ்க்கா அம்சாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. காவலில் எடுத்து விசாரணை செய்யும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Annanagar , Drug sale in Annanagar; Decision to detain African woman in prison: 3 special forces to catch gang
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...