முதலமைச்சரின் செயல்திறன், துரித நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டு பருவ மழைக்குள் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்திறன் மற்றும் துரித நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டு பருவ மழைக்குள் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.    

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ட வழிகாட்டுதலின்படி, இன்று (16.11.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா கொசுவலைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

கொரோனாவிற்கு  பின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படாததால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக  நிருபர் அவர்கள் தெரிவித்த கூற்று தவறானது.

நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வருகின்ற சுப முகூர்த்த நாளில் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் 30 திருமணங்கள் நடைபெற இருக்கின்றது. டிசம்பர் மாதம் 4ஆம் தேதி 30 திருமணங்கள் நடத்துவதற்கு இதுவரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இந்த மாதம் 20 ஆம் தேதி 11 திருமணங்களுக்கும், டிசம்பர் 4 ஆம் தேதி சுபமுகூர்த்த தினத்தில் 12 திருமணங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

ஒரு சில திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் திருமணங்கள் நடத்துவதற்கு இடம் இல்லாத சூழ்நிலையில் குறைந்த எண்ணிக்கையில்  திருமணங்கள் நடத்த அனுமதி வழங்குவார்கள் அல்லது திருப்பணி முடிந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒரு சில திருக்கோயிலில் திருமணங்கள் நடத்திட தற்காலிகமாக அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தாலும், குறைவான எண்ணிக்கையில் திருமணங்கள் நடத்துவதற்கு உத்தரவிட்டிருக்கின்றோம்.

தமிழகம் முழுவதும் இருக்கின்ற திருக்கோயில்களில் ஏற்கனவே திருமணங்கள் நடைபெறும் திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்துவதை நிறுத்தக் கூடாது என்ற உத்தரவை 20 மண்டல இணை ஆணையர்களுக்கும் வழங்கியிருக்கிறோம்.

சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் அண்மையில் தான் கும்பாபிஷேகம் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்றதனால் அந்நாட்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் தரிசனம் செய்திட வருகை தரும்போது இட நெருக்கடி ஏற்படும் என்பதால் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே திருமணங்களுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது. சிறுவாபுரி கோயிலிலும் திருமணங்கள் நடைபெறுவதற்கு உண்டான உத்தரவு வழங்கப்படும்.

கொருக்குப்பேட்டை அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை பொறுத்தளவில் ஏற்கனவே திருப்பணி மேற்கொள்ள தொல்லியல்துறை அனுமதி, மண்டலக்குழு அனுமதி பெறப்பட்டு ரூ.31 லட்சத்திற்கு அதற்கு நிர்வாக ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த திருக்கோயில் வருமானம் இல்லாத திருக்கோயில் என்றாலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அப்படிப்பட்ட திருக்கோயில்களுக்கு ஆணையர் பொதுநல நிதியிலிருந்து நிதியினை வழங்க உத்தரவிட்டிருக்கின்றார் ஆகவே வருகின்ற 27ஆம் தேதி அந்த திருக்கோயிலின் உடைய திருப்பணிகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் ஆகியோருடன் இணைந்து தொடங்க இருக்கின்றோம். இக்கோயில் பகுதியில்  ஆக்கிரமிப்புகள் அதிகமில்லை ஒரே ஒரு கடை மட்டும்தான் ஆக்கிரமிப்பில் இருந்தது. அந்த  கடையையும் அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றோம்.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை பொறுத்தளவில் அதனை அரசு எடுக்க வேண்டும் என்ற வகையில் எங்களுடைய செயல்பாடுகளை முடுக்கி விடவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட திருக்கோயில்களில் நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பது தான் இந்து சமய அறநிலையத்துறையின் மேலான எண்ணம். தமிழக முதலமைச்சர் பொறுத்தளவில் சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

சட்டத்திற்கு மீறிய செயல்கள் எங்கு நடந்தாலும் அதை கட்டுப்படுத்துகின்ற, முழுவதுமாக அப்புறப்படுத்துகின்ற நிலையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு இருக்கின்றார். ஆகவே நாங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம். 15 ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்திருந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்பதை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம்.

இந்து சமய அறநிலையத்துறையின் சட்டதிட்டங்கள் என்ன சொல்கிறதோ அதற்குட்பட்டு   விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை சரி செய்ய வேண்டும். விதி மீறல்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவோம். பக்தர்களால் வழங்கப்பட்ட காணிக்கைகள் முறையாக அந்த திருக்கோயிலின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் உத்தரவாகும்.

புராதானமான இந்த திருக்கோயிலுக்கு பாரம்பரியமாக மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு எங்களுடைய செயல்கள் அமைந்திருக்கின்றது. மற்ற திருக்கோயில் என்னென்ன வழிமுறைகளை விதிமுறைகளை பின்பற்றுகிறோமோ,  அதையேதான் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் பின்பற்றுகிறோம். இன்னார் இனியவர் என்று பார்ப்பதற்கு துறை தயாராக இல்லை. இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்பட மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.  

இந்து சமய அறநிலையத் துறையில் செயல்படுகின்ற 48 முதுநிலைத் திருக்கோயில்கள், அதிக வருவாய் பெற்று தருகின்ற கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதற்கான விளம்பர பதாகைகளை வைத்து அதில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கின்றது. அந்த திட்டத்தில் அர்ச்சகர்களை ஊக்குவிப்பதற்காக கட்டண தொகையிலிருந்து 60% தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

580 திருக்கோயில்கள் அதிக வருமானம் ஈட்டுகின்ற திருக்கோயில் கண்டறியப்பட்டுள்ளன.  இதில் 48 திருக்கோயில்களுக்கு அன்னைத் தமிழ் வழிபாடு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. மீதம் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு படிப்படியாக செயல்படுத்துவதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    

கடந்தாண்டு பருவ மழையின்போது சென்னை மாநகரம் ஸ்தம்பித்ததை நீங்கள் அறிவீர்கள். 33 செ.மீ. அளவிற்கு பெய்த மழைக்கே சென்னை மாநகரம் தத்தளித்தது. இந்தாண்டு 46 செ.மீ. மழை பெய்தும் மழை விட்ட 24 மணி நேரத்தில் முழுவதுமாக எல்லா இடங்களிலும் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. கடந்தமுறை  எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நின்றதோ அந்த பகுதிகளில் 70% இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டதனால் ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினார்கள்.

தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றது.  முதற்கட்ட திட்டத்தில் 95 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவுபெற்றுள்ளன.  இரண்டாம் கட்ட பணிகள் வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும்.

அடுத்த பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து சென்னை மாநகராட்சியில் எங்கும் மழைநீர் தேங்காத ஒரு நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும், மக்கள் எந்த விதமான துன்பத்திற்கும் ஆளாக கூடாது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் களமிறங்கி, வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மழைநீர் தேங்காத வண்ணம் செயல்படுவோம்.

நான் எதிர்கட்சித் தலைவருக்கு வைக்கின்ற ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால் நீங்கள் 2021 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது நாங்கள் 1000 கோடி ரூபாய் சென்னைக்கு செலவிட்டிருக்கின்றோம், ஆறுகளை முழுமையாக தூர்வாறி இருக்கின்றோம், மழைநீர் கால்வாயை 2000 கிலோ மீட்டருக்கு கட்டியிருக்கின்றோம், சென்னையை சிங்கப்பூர் போன்ற ஆக்கி காட்டி இருக்கின்றோம் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்காது என்று கூறியதும் அதே வாய்தான்.

ஆனால் அவர் கூறிய நான்கு மாதங்களில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெய்த 33 செ.மீ. மழையில் சென்னை ஸ்தம்பித்தது என்றால் அதற்கு காரணம் அவர்களுடைய பத்தாண்டு கால நிர்வாக சீர்கேடு, முழுமையாக கமிஷன், கலெக்சன், கரெப்சன் என்ற திசையை நோக்கி சென்றதால் தான் எங்கு பார்த்தாலும் கடந்த பருவமழையின் போது தண்ணீர் தேக்கம்.

ஆனால் இந்த முறை அந்த நிலை 80 சதவீதம் அகற்றப்பட்டிருக்கின்றது. மீதமிருக்கின்ற 20 சதவீத பணிகளை விரைந்து முடித்து அடுத்த பருவ மழைக்குள் எங்கும் தண்ணீர் தேங்காத ஒரு நிலையை மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள் தனது செயல்திறன் மற்றும் துரித நடவடிக்கைகளால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஏற்படுத்தி காட்டுவார்கள்.

        

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் இரா.மூர்த்தி, ஜெ.ஜான் எபினேசர், மண்டல குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

Related Stories: