×

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ்

சென்னை; ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது. அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை. அவசர சட்டத்துக்கு பதில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளது என அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்த சட்டத்துக்குத் தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அது அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தொடர எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.

மேலும், அவசர சட்டத்துக்குப் பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகியோர், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அது அமலில் உள்ள சட்டமாகத்தான் கருத வேண்டும் என்றும் அவசர சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான் அவசர சட்டம் காலாவதி ஆகும் என குறிப்பிட்டனர்.

அவசர சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டுவதால் அது அமலுக்கு வரும் தேதி அறிவித்த சில நாட்கள் வரை நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதிகள், அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த வழக்கு தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டனர். மனுதாரர்கள் தரப்பில் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு வழக்கு தொடர்வதற்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.


Tags : Madras High Court , Madras High Court withdraws cases against Ordinance banning online games
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...